அல் குர்ஆன் திறந்த கல்லூரி 2009.05.01 இல்ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் சமூக மாற்றத்திற்காக அறிவுத் தளத்தில் உழைப்பதை நோக்கமாகக் கொண்டு கல்லூரி இயங்குகிறது.

  • அல் குர்ஆனை மக்கள் மயமாக்குவது எவ்வாறு?
  • ஒரு சிறுபான்மை சமூகத்தில் இஸ்லாம் நடைமுறையாவது என்பதன் பொருளும் கருத்தும் யாது?
  • இஸ்லாம் என்ற சிந்தனையை, கொள்கையை நடைமுறையில் காண்பது எவ்வாறு?
  • அதற்கான வழிமுறைகள் பொறிமுறைகள் யாவை?

இந்தப் பின்னணியில் சிந்தித்ததன் காரணமாகவே இக்கல்லூரி தோற்றம் பெற்றது.

இந்தவகையில் முஸ்லிம் சமூகத்தின்அடிப்படை பிரச்சினை சிந்தனைச் சிக்கலே எனக் காணும் கல்லூரி அப்பகுதியிலேயே உழைக்கிறது, பாடுபடுகிறது.

கல்லூரி இவ்வாறானதொரு பாரிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாயினும் தன் பாதையில் கட்டம் கட்டமாக, அடியெடுத்து வைத்து செல்லவே முனைகிறது. சமூகத்தின் படித்த வர்க்கத்தினர் மீது குறிப்பாகக் கல்லூரி கவனம் செலுத்துகிறது. அவர்களில் ஒரு குறிப்பிட்டளவு தொகையினரை இஸ்லாமிய ரீதியாக உருவாக்கிவிடல் சமூக மாற்றத்தின் ஒரு கட்டமாக அமைய முடியும் எனக் கல்லூரி நம்புகிறது.

சமூகத்தில் காணப்படும் மத்ரஸா அமைப்பு சமூகத்தின் ஆன்மீகத் தேவையை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்டது. எனினும் சமூக விவகாரங்களிலும் ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற நிலைக்கு அதிலிருந்து பட்டம் பெற்று வெளியானோர் தள்ளப்பட்டதனால் மத்ரஸா ஆங்காங்கே சில வளர்ச்சிகளைக் கண்டது. எனினும் இஸ்லாமிய சிந்தனையின் நவீன வளர்ச்சியை உள்வாங்கியதாக அது அமையாததால் சமூக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து அதனை வழி நடாத்திச் செல்ல அதனால் முடியவில்லை.

இக்கல்லூரி திறந்த அமைப்பையும் தொலைக் கல்வி ஒழுங்கையும் பெற்றுள்மையால் இலகுவாகி இஸ்லாமியக் கல்வியைத் தொடர வாய்ப்புள்ளது.

இது இஸ்லாமிய அறிவை சமூகமயப்படுத்துவதற்கான ஒரு புதிய பிரவேசம். இது வெற்றியளிக்க வேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம். சமூகத்தின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர்
பணிப்பாளர்,
அல் குர்ஆன் திறந்த கல்லூரி.