திறந்த கல்வி ஒழுங்கு இஸ்லாமியக் கல்விக்கான ஒரு புதிய பிரவேசம். இஸ்லாமியக் கல்வியைப் பொறுத்தவரையில் இலங்கையில் முதன் முதலாக  அதனை நாம் அறிமுகப் படுத்துகிறோம். நேரடியாகவும், தொலைக் கல்வி ஒழுங்கிலும் அதனை நாம் நடைமுறைப் படுத்தி வருகிறோம். இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் இதனை மேலும் விரிவு படுத்த முனைகிறோம்.

திறந்த கல்வி ஒழுங்கு பெருந்தொகையானோருக்கு கற்கும் வாய்ப்பைத் தருகிறது. விடுமுறை நாட்கள், மாலை நேரங்கள், இரவு நேரங்கள் என ஓய்வு நேரங்களை பயன்படுத்துவதன் ஊடாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டே கற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது. இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக பின்பற்றிக் கற்கும் போது தம் சொந்த இடங்களில் இருந்து கொண்டே படிக்கும் வாய்பபைப் மேலம் பெருந்தொகையானோர் பெறுகின்றனர்.

இஸ்லாமிய கல்வியில் இந்த ஒழுங்கைப் பின்பற்றுவதன் ஊடாக இஸ்லாமிய அறிவு பாரியளவு பரவுகிறது. அது இஸ்லாம் பற்றிய வழிப்புணர்வுக்கும் நடத்தை மாற்றத்திற்கும், சமூக நிறுவனங்களது இயக்கம் சீராக அமையவும் பெரும் பங்களிப்பு செய்ய முடியும்.

இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வாழ்கிறோம். முஸ்லிம் கமூகத்தினுள்ளேயும் அச்சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். வெளியிலிருந்தும் அச்சவால்கள் எம்மை நோக்கி வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தை வழி நடாத்த இஸ்லாமிய அறிவுசார் தலைமைகளின் தேவை இக்காலத்தில் மிகவும் உணரப் படுகின்றது. இந்தவகையில் அபார அறிவுத் திறமை கொண்டோரை இஸ்லாமிய அறிவுப் பகுதிக்கு ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது.

இஸ்லாமிய அறிவுத் துறை சாரா எமது சமூகப் படித்தவர்க்கத்தினர் இதற்கு பொருத்தமானவர்கள் என்பது இங்கு அவதானிக்கத்தக்க உண்மையாகும். முதலில் இவர்கள் அறிவு முதிர்ச்சியும், மன முதிர்ச்சியும் கொண்டவர்கள். இரண்டாவது இவர்கள் நவீன உலக சவால்களையும், அதன் அரசியல், பொருளாதார, தொழில் நுட்ப கட்டமைப்புகளையும் நன்கு புரிந்தவர்கள். மூன்றாவது சிறுபான்மையாக வாழும் எமது நிலையில் பெரும்பான்மையோடு நெருங்கி உறவாடுபவர்களும் இவர்களே.

இத்தகைய படித்தவர்க்கத்தினரை இஸ்லாமிய அறிவோடு தொடர்பு படுத்துவதற்கான மிக் சிறந்த வழி திறந்த கல்வி அமைப்பே என்பது மிகத் தெளிவு.

இன்னொரு புறத்தால் பல்கலைக் கழக மாணவர்கள் இஸ்லாமிய அறிவோடு தொடர்புபட இக்கல்வி ஒழுங்கு வாய்ப்பை வழங்குகிறது. தாம் படிக்கும் துறைகளோடு இஸ்லாமிய அறிவையும் பெறும்போது எதிர் காலத்தில் இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அறிவுத் தூண்களாக மாறும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுகிறது.

இறுதியாக முறைசார் ஒழுங்கின் கீழ் சான்றிதழ்கள் பெறாத ஆனால் தம்முள்ளே பல திறன்களை அடக்கியுள்ள பொதுமக்களும் இந்தக் கல்வி ஒழுங்கின் மூலம் இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்நிலையில் அவர்களது சமூகப் பங்களிப்பும் காத்திரமானதாகவும் பாரியதாகவும் அமைகிறது.

எமது கல்வித் திட்டம் பற்றிய சில வார்த்தைகள்

நவீன இஸ்லாமிய சிந்தனை, ஆய்வுகள் பின்னணியிலிருந்து எமது பாடத்திட்டத்தை நாம் அமைத்துள்ளோம். அதற்கு இரண்டு காரணங்கள்.

 1. பழைய இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தை ஆய்வுகள், மீள் வாசிப்புகள் ஊடாக நவீன இஸ்லாமிய அறிஞர்கள் ஒழுங்குபடுது்திச் சீர்படுத்தியுள்ளனர்.
 2. சமகாலத்தின் யதார்த்தம், பிரச்சினைகளை விளங்கி அதற்கேற்ப இஸ்லாமியக் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், சட்டங்களையும் முன்வைப்பதில் இக்கால அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல வெற்றிகளைக் கண்டுள்ளனர்.

இறுதியாக,

ஏற்கனவே தொலைக்கல்வி ஒழுங்கிலும், நேரடிக் கற்பித்தல் முறை ஊடாகவும் நாம் இயங்கி வருகிறோம்.

இப்போது Online முறைமை ஊடாக கல்வியை வழங்க நாம் முன்வருகிறோம்.

இந்தவகையில் மூன்று பகுதிகளை நாம் தொடங்க ஆவனம் செய்து வருகிறோம்:

 1. இஸ்லாமியக் கலைகள்
  • அல் குர்ஆன்
  • அல் ஹதீஸ்
  • அல் பிக்ஹ்
 2. நவீன இஸ்லாமியக் கலைகள்:
  • அரசியல்
  • பொருளாதாரம்
  • இலக்கியம்
  • மனோதத்துவவியல்
 3. இஸ்லாமிய அறிவை அணுகுவதற்கான கலைகள்
  • அரபு மொழி
  • நவீன இஸ்லாமிய சிந்தனை