பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 5

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 5

அரபியில்: யூஸுப் அல் கர்ளாவி

தமிழில்: முஹம்மத் அலி (நளீமி)

பத்வா வழங்கும் போது நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் – 4: தொடர்ச்சி


(5) உலகில் ஏற்பட்டுள்ள  புதிய மாற்றங்களை கவனத்திற் கொள்ளாமல்  மார்க்கத்தை மிக இறுக்கமாகக் கடைபிடிக்கின்றவர்களுக்கும், மேற்கத்தைய சிந்தனையால் பாதிக்கப்பட்டு மார்க்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் மத்தியில் நடுநிலை பேணுதல்.

 

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நான் கடைபிடிக்கின்ற ஒரு பண்புதான் நடுநிலை என்ற பண்பு.  இஸ்லாத்தின் போதனைகளை தீவிரமாகப் பின்பற்றி, அதன் எல்லைக்கு அப்பால் சென்று செயற்படுதல் என்பவற்றுக்கும், அதன் போதனைகளை புறக்கணித்தல், வீணடித்தல், குறைவு செய்தல் என்பவற்றுக்குமிடையில் நடுநிலமை பேணுவதாகும்.

மேலும் நாகரீகம், முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரில் மார்க்கத்தின் அடிப்படை சட்டதிட்டங்களைக் கூட ஹலால் ஆக்குவதற்கு விரும்புகின்றவர்களுக்கு மத்தியிலும் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள் என்பதற்காக அவர்கள் சொன்ன அனைத்தையும்  அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யக் கூடாதென்று அவற்றைப் புனிதப்படுத்திப் பார்பவர்களுக்கு மத்தியிலும் நடுநிலை பேணுவதாகும்.

இத் தலைப்பில் இரண்டு வகையினர் காணப்படுகின்றனர்.

(1) வளர்ச்சியின் அடிமைகள் – நவீன உலகின் அடிமைகள்

இவர்களை பொருத்தவரை அனைத்தையும் மாற்ற விரும்புகின்றவர்கள். எதுவும் அதன் நிலையில் அப்படியே இருப்பதை விரும்பாதவர்கள். உலகம் முன்னேறுகின்றது, வளர்ச்சியடைகின்றது, வாழ்க்கை மாறுகின்றது என்பதை காரணமாக சொல்லி  இவ்வாறு சொல்கின்றனர்.

அதாவது மேற்கத்தைய சிந்தனையால் பாதிக்கப்பட்ட இவர்கள் உலகில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மார்க்கத்தின் அடிப்படை உட்பட அனைத்தையும் மாற்ற வேண்டும் எனக் கருதுகின்றார்கள். இவர்களை நவீன உலகின், மேற்கத்தைய கலாசாரத்தின் அடிமைகள் என்று சொல்ல முடியும்.

இவர்களைப் பார்த்து சில இலக்கிய வாதிகள் ஏலனமாக இப்படி சொன்னார்கள்.

“அவர்கள் மார்க்கத்தை, மொழியை, சூரியனை, சந்திரனை என அனைத்தையும் மாற்ற விரும்புகிறார்கள்.”

இந்தக் கருத்தை விளங்கப்படுத்துவதற்காக வட்டி பற்றிய அவர்களது கருத்தை உதாரணமாக எடுத்திருக்கிறேன்.

வட்டி ஹராம் என்பது மார்க்கத்தில் காணப்படும் திட்டவட்டமான, முரண்பாடுகளற்ற தெளிவான ஒரு கருத்து.

ஆனால் இவர்கள் நவீன உலகிற்கு வட்டி அவசியம் என்று கருதி அதனை ஹலாலாக்குகிறார்கள். இதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரம்

வட்டியுடன் சம்மந்தப்பட்டவர்கள் பிரதானமாக இரண்டு பேர் இருப்பார்கள்.

  1. பணக்காரன், செல்வந்தன். அவன் தன்னிடம் இருக்கும் பணத்தை ஏழைகள், தேவையுடையவர்களுக்குக் கொடுப்பான். பின் அவர்களிடமிருந்து வட்டியை பெற்றுக் கொள்வான்.
  2. ஏழைகள் பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்கள்.

இவர்கள் அச் செல்வந்தனிடம் தேவைக்குப் பணம் எடுப்பார்கள். பிறகு அதற்கு வட்டி கட்டுவார்கள்.

ஆரம்ப காலத்தில் வட்டியுடன் சம்மந்தப்பட்டவர்கள் இரண்டு பேர் இருந்தது போல நவீன காலத்திலும் இரண்டு பேர் காணப்படுகிறார்கள்.

  1. ஏழை, பொருளாதார ரீதியாக பலவீனமானவன். இவன் தன்னிடமுள்ள பணத்தை செல்வந்தனான வங்கிக்கு கொடுக்கின்றான். பின் அதனிடமிருந்து வட்டியைப் பெற்றுக் கொள்கிறான்.
  2. தன்னிடம் காணப்படும் அதிகளவான வைப்புப் பணத்தினால் இலாபம் சம்பாதிக்கும் பணக்கார வங்கி ஏழை ஊழியனிடமிருந்து பணத்தை எடுக்கும். பிறகு அவனுக்கு வட்டி கட்டும்.

ஆரம்ப காலத்தில் பணக்காரன் ஏழையிடமிருந்து வட்டியைப் பெற்றுக் கொண்டான். ஆனால் இன்று ஏழை பணக்காரனிடமிருந்து (பணக்கார வங்கியிடமிருந்து) வட்டியைப் பெற்றுக் கொள்கிறான்.

எனவே நவீன உலகத்தில் தோன்றியுள்ள இந்த மாற்றம் குர்ஆன் தடை செய்துள்ள வட்டியின் சட்டத்தில் மாற்றத்தை வேண்டி நிற்கிறது.

இந்த வாதம் அறிவு, புத்தி ஏற்றுக்கொள்ளாத ஒரு வாதம். குர்ஆன், சுன்னா, இஜ்மா என்பவையும் ஒத்துக் கொள்ளாத ஒரு வாதம். ஒரு செயல் தெளிவான ஹராம் என்று இருக்கும் போது, அதுவும் தெளிவான ஒரு பெரும்பாவம் என்று இருக்கும் போது ஷரீஆ அனுமதியளித்த, ஆகுமாக்கிய வட்டத்திற்குள் அதனை கொண்டு வருவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.

வட்டியை ஆகுமாக்குவதற்கு இவர்கள் சொன்ன காரணம், இவர்கள் முன்வைத்த எடுத்துக் காட்டுகள் உடன் பாடானவை அல்ல. ஏற்றுக் கொள்ள முடியாதவை, போலி வாதங்களால் ஆனவை. இவர்களிடம் யார் சொன்னது வட்டியை ஹராம் ஆக்குவதற்கு அது ஒன்று மட்டும் தான் காரணமென்று?

வட்டியை ஹராம் ஆக்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல கோணங்கள் இருக்கின்றன. சிலது பொருளாதாரம் சார்ந்தது. சிலது சமூகம் சார்ந்தது. சிலது அரசியல் சார்ந்தது. சிலது பண்பாடுகள் சார்ந்தது. இது பற்றி பொருளியற்துறை அறிஞர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை, புத்தகங்களை சமர்பித்துள்ளனர். எனவே இந்த விடயத்தில் பேசுபவர்கள் கட்டாயம் இந்த ஆய்வுக் கட்டுரைகளை, புத்தகங்களை படிக்க வேண்டும்.

அத்தோடு அவர்கள் சொன்ன அந்தக் காரணம் அதாவது வங்கியிலிருந்து வட்டி எடுப்பவன் பலவீனமானவன், ஏழை என்பது எந்த விதத்திலும் சரியான ஒரு கண்ணோட்டம், பார்வை கிடையாது.

ஏனெனில் எத்தனையோ மில்லியன் கணக்கான சொத்துகளுக்கு சொந்தக்காரர்கள் பணத்தை வங்கியில் இட்டு அதற்கான வட்டிப் பணத்தை எடுக்கின்றனர். வைப்புத் தொகை அதிகரிக்கின்ற அளவு,வைப்புக் காலம் நீடிக்கின்ற அளவுக்கு வட்டி வீதம் அதிகரிக்கும்.

பலவீனமானவன், தேவையுடையவனைப் பொருத்தவரை அவன் வங்கியில் வைப்புச் செய்வதில்லை. அப்படியே அவன் வைப்புச் செய்தாலும் சிறியதொரு தொகையை, அற்பமான ஒரு தொகையையே தான் வைப்புச் செய்கிறான். அவனுக்கு அதிலிருந்து கிடைக்கும் வட்டி மிக சொற்பமே. ஆனால் அப்பணத்திலிருந்து வங்கி அடையும் இலாபம், பலன் அதிகம். அவன் பணத்தை முதலீடு செய்து அதிக இலாபம் பெறும் வங்கியிடமிருந்து சிறியதொரு இலாபத்தைத்தான் வட்டிப் பணமாகப் பெற்றுக் கொள்கிறான். (வங்கிக்குக் கிடைக்கும் அதிக இலாபத்திலிருந்து சிதறி விழும் சில பருக்கைகளைத்தான் அவன் இலாபமாகப் பெற்றுக் கொள்கிறான்).

எனவே வங்கியில் பணம் வைப்பவன் தான் அதிக இலாபம் பெறுகிறான் என்ற பார்வை, பிழையானதும் நீதியற்றதுமான பார்வை கோணமாகும்.

ஆச்சரியம் என்னவெனில் பொருளியல் துறை அறிஞர்கள் வட்டி சம்மந்தமான தங்களது ஆய்வுகளை செய்து விட்டு அது பொருளாதாரத்திற்கு ஒரு கேடாகும் என்று சொல்கின்ற வேலை பத்வா வழங்குகின்ற துறையில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் வங்கி வட்டியை சரிகாண்பதுதான்.

இந்த வட்டி உதாரணத்தை இங்கு நான் சொன்னதன் காரணம். முன்னேற்றம் வளர்ச்சி, நாகரீகம் என்ற சிலையை வணங்குகின்றவர்கள் நாங்களும் இஜ்திஹாத்[1] செய்வதற்கு தகுதியானவர்கள் என்று சொல்லிக் கொண்டு, இஜ்திஹாத் செய்வதற்கு அனுமதியில்லாத பகுதியில்  இஜ்திஹாத் செய்து அல்லாஹ்வினது சட்டங்களை மாற்றுவதற்கு முனைகிறார்கள் என்பதற்கான ஒரு முண்ணுதாரணமாகத்தான்.

உறுதிப்படுத்தப்பட்ட விடயம் இஜ்திஹாத் திட்டவட்டமான விடயங்களில்[2] செய்ய முடியாது. இஜ்திஹாத் பல கருத்துக்கு இடம்பாடானவற்றில்தான்[3] செய்ய முடியும்.

வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு அதனை வணங்குபவர்களில் ஒருவனின் கருத்தை  இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

ஆண், பெண் சமத்துவம் பற்றி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ஒரு அரபுத் தலைவர் பின்வருமாறு சொல்கிறார்.

“ஒரு குறைபாட்டின் பக்கம் உங்களது பார்வையை திருப்புவதற்கு விரும்புகின்றேன். எனது பணி முடிவுக்கு வருவதற்கு முன்பு அதனை சீர் செய்ய என்னுடைய முழு முயற்சியையும் செலவழிப்பேன். ஆண், பெண் சமத்துவம் என்ற விடயத்தை இதன் மூலம் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்த சமத்துவம் பாடசாலையில், தொழிலில், ஏன் இராணுவத்தில், பாதுகாப்புப் படையில் கூட காணப்படுகிறது. ஆனால் இந்த சமத்துவம் வாரிசு சொத்தில், அனந்தரச் சொத்தில் இல்லை. அங்கு ஆண்களுக்கு 02உம், பெண்களுக்கு 01உம் தான் வழங்கப்படுகிறது. இந்தக் கோட்பாடு ஆண்கள், பெண்களின் நிர்வாகிகளாக இருக்கும் பட்சத்தில் சரியானது.
உண்மையில் அன்று ஆணும், பெண்ணும் சமமானவர்கள் என்ற சிந்தனையை, கருத்தை ஏற்றுக் கொள்ளாத சமூக நிலமையில் தான் அவள் இருந்தாள்.

பெண் உயிருடன் புதைக்கப்பட்டாள், இழிவாக நடாத்தப்பட்டாள். இதோ இன்று பெண்  வேளைத்தளத்தில், தொழில் துறையில் நுழைந்து விட்டாள். அவளை விட வயது குறைந்த அவளது உடன்பிறந்தவர்களின் பொறுப்புக்களை அவள் இப்போது சுமக்கின்றாள், பொறுப்பேற்றுக் கொள்கின்றாள். ஆண்களைப் போல் அவளும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாள்.

எனவே நிலமை இவ்வாறு இருக்கும் போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இஜ்திஹாதின் வழிறையை நாடிச் செல்வது, மேலும் சமூகத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் வேண்டி நிற்பதற்கேற்ப ஷரீஆ சட்டத்தை வளர்ச்சிக்குற்படுத்துவதை, முன்னேற்றத்திற்குற்படுத்துவதைப் பற்றிச் சிந்திப்பது அறிவு பூர்வமானதாக இருக்க மாட்டாதா?

இதற்கு முன்பு நாங்கள் பலதார மணத்தை தடை செய்திருந்தோம். சங்கை மிக்க குர்ஆன் வசனங்களை இஜ்திஹாத் செய்து அதனை நாம் எப்படிக் கருதினோம் எனில் ஆகுமான ஒரு விடயத்தை தடை செய்வதற்கு, நீக்குவதற்கு இமாமுக்கு, நாட்டுத் தலைவருக்கு இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. அப்படி நீக்குவதன் மூலம் சமூகத்திற்கு நலன் இருக்கிறது என்று கருதும் பட்சத்தில்

முஃமின்களின் தலைவர் என்ற வகையில் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, நீதி என்ற சொல்லின் புரிதலிற்கேற்ப, வாழ்வொழுங்கிற்கேற்ப சட்டங்களையும் வளர்ச்சிக்குற்படுத்துவது, ஆட்சியாளர்களின் கடமையாகும்.

(2) மார்க்கத் தீர்ப்பில் கடும் போக்கை, இருக்கமான போக்கைக் கடைபிடிப்பவர்கள்.

காலம் மாறுகின்றது, உலகம் வளர்ச்சியடைகின்றது, முன்னேறுகின்றது இவற்றிற்கு ஏற்ப ஷரீஆவையும் மாற்றவேண்டும் என்று சொல்லி அது தடை செய்த அனைத்தையும் ஆகுமாக்குகின்றனர். இவர்களின் நாவுக்கு மிகவும் நெருக்கமான வார்த்தை ஹலால் என்பதாகும். இதற்கு இவர்கள் ஷரீஆவின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அதே நேரம் இன்னொரு சாரார் இந்த மாற்றம், வளர்ச்சி எதனையும் கவனத்தில் கொள்ளாமல் அனைத்தையும் ஹராமாக்குகின்றனர், தடை செய்கின்றனர்.

இவர்களின் நாவுக்கு மிகவும் நெருக்கமான வார்த்தை ஹராம் என்பதாகும். இந்த வார்த்தையின் பாரதூரத்தை உணராமல் போதுமான அளவு ஆதாரங்களை சேகரிக்காமல் ஹராம் என்று அனைத்திற்கும் சொல்கின்றனர். இன்று வாழ்வு ஹராம்களில் ஒரு ஹராமாகி விட்டது.

இவர்களிடம் பெண் வேலைக்குச் செல்வது ஹராம், பாட்டு ஹராம், இசை ஹராம், பொம்மைகள் ஹராம், டீவி, சினிமா, புகைப்படம் என அனைத்தும் ஹராம்.

குர்ஆனும், சுன்னாவும்  மிகவும் தெளிவான வசனங்களினூடாக ஒரு விடயத்தை தடை செய்துள்ளது என தெறிந்தாலன்றி ஹராம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது குற்றம், தவறு என குர்ஆன், சுன்னா, ஸஹாபாக்கள், இமாம்கள் என அனைவரும் எச்சரித்த போதிலும் இவர்கள் ஹராம் என்ற வார்த்தையை மிக இலகுவாக, மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللَّـهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّـهُ أَذِنَ لَكُمْ  أَمْ عَلَى اللَّـهِ تَفْتَرُونَ 

(நபியே!) நீர் கூறும்; “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
ஸூரா யூனுஸ் 59ம் வசனம்

 

وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمُ الْكَذِبَ هَـٰذَا حَلَالٌ وَهَـٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوا عَلَى اللَّـهِ الْكَذِبَ  إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّـهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ ﴿١١٦﴾

உங்கள் நாவுக்கு வந்தபடி பொய்யாக இது ஹலால், இது ஹராம் என்று சொல்லாதீர்கள். அவ்வாறு சொல்வதானால் நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகின்றீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகின்றார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.(116)
ஸூரா நஹ்ல் 116ம் வசனம்

இமாம் இப்னு கையும் கூறுகின்றார் :

அல்லாஹ்வும், ரஸூலும் ஒரு விடயத்தில் ஹராம்[4], ஹலால்[5], வாஜிப்[6], மக்ரூஹ்[7] என்று சொல்லியிருப்பதை நஸ்களில்[8] இருந்து தெளிவாக, உறுதியாக தெரிந்து கொள்ளாமல் அவர்கள் இதனை ஹராம், ஹலால், வாஜிப், முபாஹ்[9] என்று சொல்லியிருக்கின்றார்கள் என்று சாட்சி சொல்லக் கூடாது.

மார்க்கத்தைக் கண்மூடித்தனமாப் பின்பற்றுகின்ற ஒருவரின் புத்தகத்திலிருந்து ஒரு கருத்தை எடுத்து சொல்வதாக இருந்தால் அப்புத்தக ஆசிரியர் என்ன ஆதாரங்களின் அடிப்படையில் தனது கருத்துக்களைச் சொல்லியுள்ளார் என்று தெறியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள கருத்தை வாசித்து விட்டு அல்லாஹ், ரஸூல் சொன்னதாக சொல்லக் கூடாது. மக்களை அக் கருத்தில் இஸ்திரப்படுத்தக் கூடாது.

வேறு சில ஸலப்கள் சொன்னார்கள் :- அல்லாஹ் இதனை ஹலால் ஆக்கினான் அல்லது ஹராமாக்கினான் என்று சொல்லும் போது இல்லை நீ பொய் சொல்லிவிட்டாய் நான் அப்படிச் சொல்லவில்லை. நான் ஹராமாக்கவுமில்லை, ஹலாலாக்கவுமில்லை என்று அல்லாஹ் சொல்வதை உங்களுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன்.

முஸ்லிமில் வந்த ஒரு அறிவிப்பு :-

وإذا حاصرتَ أهلَ حِصنٍ ، فأرادوك أن تنزلَهم على حكمِ اللهِ ، فلا تنزلْهم على حكمِ اللهِ . ولكن أَنزِلْهم على حكمِك . فإنك لا تدري أُتصيبُ حكمَ اللهِ فيهم أم لا

ஸஹீஹ் முஸ்லிம் 1731

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :- “நீ ஒரு கோட்டையே முற்றுகையிட்டால் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்புப் படி அவர்களை நடத்துமாறு அவர்கள் கேட்டால் அவ்வாறு செய்ய வேண்டாம். அல்லாஹ்வின் தீர்ப்பில் நீ சரியாக முடிவு எடுப்பாயா இல்லையா என்பதை நீ அறிய மாட்டாய் என்றாலும் உமதும், உமது தோழர்களினதும் தீர்ப்புப் படி அவர்களை நடத்துங்கள்”

இஃலாமுல் முவக்கிஈன் –

இமாம் மாலிக் :

“எமது முன்னோர்களிடம் ஏதாவது ஒரு விடயம் பற்றி கேட்கப்பட்டால் இது ஹலால், இது ஹராம் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக நான் இதனை வெறுக்கிறேன், விரும்புகிறேன் என்று தான் சொல்வார்கள். இது ஹராம், ஹலால் என்று சொல்வது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகும். நீங்கள் இந்த ஆயத்தைக் கேட்கவில்லையா?

قُلْ أَرَأَيْتُم مَّا أَنزَلَ اللَّـهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَالًا قُلْ آللَّـهُ أَذِنَ لَكُمْ  أَمْ عَلَى اللَّـهِ تَفْتَرُونَ 

(நபியே!) நீர் கூறும்; “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

ஸூரா யூனுஸ் 59ம் வசனம்

ஹலால் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹலால் என்று சொன்னது.  ஹராம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராம் ஆக்கியது.”


[1] இஜ்திஹாத் : சட்ட  மூலாதாரங்களினூடாக மனித அறிவைப் பிரயோகித்து சட்டங்களைப் பெறுதல்.

[2] கத்இய்யா – قطعية

[3] ழன்னிய்யா – ظنية

[4] தடை செய்யப்பட்டது.

[5] ஆகுமாக்கப்பட்டது.

[6] கடமை.

[7] வெறுக்கத்தக்கது. (செய்யாமல் இருப்பது சிறந்தது)

[8] சட்டங்களைப் பேசும் குர்ஆனிய வசனங்கள், ஹதீஸ்கள்

[9] அனுமதியளிக்கப்பட்டது.

குறிப்பு: இங்கு பிரசுரிக்கப்படும் கருத்துக்களுக்கு அந்த அந்த கட்டுரை ஆசிரியர்களே பொறுப்புதாரர்களாவர்.

அஷ்ஷெய்க் முஹம்மத் அலி 2012 ஆண்டு தொடக்கம் இன்று வரை அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.